திருமண வாழ்க்கையில் தம்பதியருக்கு இடையே வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் சில ரகசியங்களை இறுதிவரை வெளிப்படுத்துவதே இல்லை.
குடும்ப அமைதியைக் காப்பாற்றவும், கணவரின் மனநிலையைப் புரிந்து கொண்டும் பெண்கள் சில விஷயங்களை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்கின்றனர். இதில் முதலாவதாக, பெண்களுக்கு ஏற்படும் பழைய காதல் அல்லது திருமணத்திற்கு முந்தைய நினைவுகள் அடங்கும்.
இதைக் கணவரிடம் பகிர்ந்து கொண்டால் தேவையில்லாத சந்தேகங்களும் குடும்பத்தில் தேவையில்லாத விரிசல்களும் ஏற்படும் என்பதால், பெண்கள் இதை ஒருபோதும் தன் கணவரிடம் வெளிப்படுத்துவதில்லை. இரண்டாவதாக, பெண்கள் தங்களின் அவசர காலத் தேவைகளுக்காகச் சேர்த்து வைக்கும் ரகசியச் சேமிப்பு பணம் ஆகும். இதுதான் பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ரகசியமாகப் பார்க்கப்படுகிறது.
குடும்பச் செலவுகளுக்கு நடுவே தங்களது கையில் கிடைக்கும் சிறு தொகையைச் சேமித்து வைத்து, குடும்பத்திற்கு ஏதேனும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி வரும்போது கணவருக்குத் தெரியாமல் உதவி செய்யவே இந்தப் பணத்தைப் பத்திரப்படுத்துகிறார்கள்.
மூன்றாவதாக, கணவரின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் பற்றித் தங்களுக்கு இருக்கும் சில அசௌகரியமான கருத்துக்களைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. மாமியார் வீட்டாரின் நடவடிக்கைகளில் சில பிடிக்காவிட்டாலும், கணவரின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக அதைத் தங்களுக்குள்ளேயே விழுங்கிக் கொள்கின்றனர்.
நான்காவதாக, பெண்கள் தங்களது உடல்நலக் கோளாறுகள் மற்றும் மன ரீதியான வலிகளைப் பல நேரங்களில் கணவரிடம் மறைத்து விடுகின்றனர். தான் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது சோர்வடைந்தாலோ குடும்பத்தின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படும், கணவர் வீணாகக் கவலைப்படுவார் என்ற எண்ணத்தில் சிறு சிறு உடல் உபாதைகளைத் தாங்கிக் கொண்டு வழக்கம்போலச் செயல்படுவார்கள்.
இப்படிப் பெண்கள் மறைக்கும் இந்த நான்கு ரகசியங்களும் சுயநலத்திற்காக அல்லாமல், தங்களது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் கணவரின் நலனையும் மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படுபவை என்பதுதான் இதில் உள்ள நெகிழ்ச்சியான உண்மையாகும்.
