உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், தில்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் தந்தை சுமார் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஒரு சொகுசு காரை வரதட்சணையாகக் கொடுத்துள்ளார். இருப்பினும், தில்லியில் உள்ள கணவர் வீட்டிற்குச் சென்ற முதலிலிருந்தே, மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் வரதட்சணைப் பொருட்களைக் குறை கூறி அப்பெண்ணை மனரீதியாகக் கடுமையாகத் சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூலை 4-ஆம் தேதி இந்த ஜோடி தங்களது தேனிலவுக்காக அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றுள்ளது. அங்கு தங்கியிருந்த போது, அந்தப் பெண்ணுக்குத் திடீரென கடுமையான வயிற்று வலியுடன் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் நிகில் மிஸ்ரா, “என்னுடைய மூடை கெடுத்துவிட்டாய், இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை” என்று கத்தி, மனைவியை சரமாரியாக மிதித்தும், கன்னத்தில் அறைந்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஹோட்டல் ஊழியர்கள், அவரை மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு தில்லி திரும்பிய அந்தப் பெண், தன் மாமியார் மற்றும் நாத்தனாரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதபோது, அவர்களும் கணவனுக்கு ஆதரவாகப் பெண்ணையே மனரீதியாகத் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், ஜூலை 14-ஆம் தேதி, அதாவது திருமணமான வெறும் 45 நாட்களிலேயே அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதுகுறித்துச் சமாதானம் பேச வந்த பெண்ணின் தந்தையையும் அவமானப்படுத்தி அனுப்பியதோடு, கொடுத்த வரதட்சணைப் பொருட்களையும் திருப்பிக் கொடுக்க மறுத்து, தொடர்ந்து போனில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தினருடன் காவல் நிலையங்களுக்கு அலைந்தும் முதக் கட்டமாகப் புகாரைப் பதிவு செய்யக் காவல்துறையினர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியாகக் கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) டாக்டர் கௌஸ்துப் தலையிட்டதைத் தொடர்ந்து, கணவர் நிகில் மிஸ்ரா, மாமியார் மற்றும் நாத்தனார் மீது தீவிர சட்டப்பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
