மும்பை அருகே உள்ள நலசோபாராவில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 17 வயது சிறுவன், அவசரமாக பேச வேண்டிய விஷயம் இருப்பதாக கூறி சிறுமியை சந்திக்க அழைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை நலசோபாரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மற்றொரு 17 வயது சிறுவனும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 11-ம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், இரு சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை செல்போனில் பதிவு செய்ததாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது சகோதரருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக மிரட்டியதால் சிறுமி சம்பவத்தை வெளியில் சொல்லாமல் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி சிறுமியின் உறவினர் ஒருவர் அந்த வீடியோவை பார்த்த பிறகே குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கில் 17 வயதுடைய இரு சிறுவர்களையும் போலீசார் காவலில் எடுத்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
