சமூக வலைதளங்களில் சில நொடிகள் கிடைக்கும் புகழுக்காகவும், இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணைய வைக்கும் விபரீத ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரயில் தண்டவாளத்தின் நடுவே இரண்டு இளைஞர்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு சோஷியல் மீடியா வீடியோ பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக வந்த ரயிலைப் பொருட்படுத்தாமல், தண்டவாளத்திலேயே அமர்ந்து கொண்டு அவர்கள் செய்த இந்த அசட்டுத் துணிச்சல் செயல், பேரழிவில் முடிய வேண்டிய ஒன்று. அதிர்ஷ்டவசமாக, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த ரயிலின் ஓட்டுநர் இவர்களின் ஆபத்தான செயலைத் தொலைவிலிருந்தே கவனித்துள்ளார்.

நொடிப்பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்ட அந்த ஓட்டுநர், உடனடியாக அவசரக் கால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலைச் சரியா நேரத்திற்குக் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஓட்டுநரின் இந்தத் துரிதமான நடவடிக்கையால், அந்த இரண்டு இளைஞர்களும் மிகச் சில அங்குல இடைவெளியில் மரணத்தின் பிடியிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினர்.

ஒருவேளை ஓட்டுநர் சற்று தாமதித்திருந்தாலும் அல்லது பிரேக் செயல்படாமல் போயிருந்தாலும், இருவரின் உயிரும் அந்த இடத்திலேயே பறிபோயிருக்கும். மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய இந்த அதிர்ச்சிச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஓட்டுநரின் சமயோசித புத்தியைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வரும் அதே வேளையில், ரீல்ஸ் மோகத்தில் தங்களின் உயிரையும், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய அந்த இளைஞர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் இரயில்வே காவல்துறை இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தண்டவாளத்தில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

“>