இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை  பதிவு செய்து அசத்தியுள்ளார். காலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் படிக்கலின் இந்தச் சிறப்பான மைல்கல், இந்திய அணியின் முகாமில் பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இடதுகை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைக் கடந்தபோது, அரங்கில் அமர்ந்திருந்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் எழுந்து நின்று கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியின் பயிற்சி உடையில் இருந்த கம்பீர், படிக்கலின் சாதனையை முகத்தில் புன்னகையுடன் கைதட்டிப் பாராட்டினார். மறுபுறம், பார்வையாளர் மாடத்தில் சன்கிளாஸ் அணிந்து அமர்ந்திருந்த அகார்கரும் புன்னகையுடன் கைதட்டி இந்தச் சிறப்பான தருணத்தைக் கொண்டாடினார். இவர்களின் இந்த உற்சாகமான எதிர்வினைகள், படிக்கலின் கம்பேக் இன்னிங்ஸின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.

தேவ்தத் படிக்கல் முன்னதாக 2024-25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் போது ஆஸ்திரேலியாவில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பிறகு அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது காலே டெஸ்ட் போட்டியில் கம்பீரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, இந்திய அணியின் 3-வது வரிசை பேட்டிங்கில் நிலவி வந்த நீண்ட காலச் சிக்கலுக்கு இந்தப் சதம் ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது. கடந்த 2024 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷூப்மன் கில் சதம் அடித்ததுக்குப் பிறகு, கடந்த 19 டெஸ்ட் போட்டிகளில் 7 வெவ்வேறு வீரர்களை 3-வது வரிசையில் களமிறக்கியும் யாரும் சதம் அடிக்காமல் இருந்தனர். அந்தச் சாதனைக் குறையை தற்போது படிக்கல் தகர்த்தெறிந்துள்ளார்.