சென்னை திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த தனுஷ் என்ற மாணவர், மாணவர்களிடையேயான ‘சீனியாரிட்டி’ தகராறு காரணமாக பிளஸ் 1 மாணவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகப் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களிலேயே, தலைநகர் சென்னையிலும் இதுபோன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில் அரசைச் சாடியுள்ள அவர், சட்டம் – ஒழுங்கை சரியாகப் பராமரிக்கத் தெரியாத நிர்வாகத்திறனற்ற கோமாளி அரசாகச் செயல்படுவதால் மட்டுமே சமூக விரோதிகளுக்குச் சட்டத்தின் மீதும் காவல்துறை மீதும் துளியும் பயமில்லாமல் போயிருக்கிறது என்று காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களைச் சுற்றி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் வன்முறைகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளும் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அச்சத்தையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
