இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் விரும்பி அணியும் ஆடைகளில் ஜீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஃபேஷன் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடலுக்குப் பல நரம்பியல் பாதிப்புகள், தோல்தொற்று மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் புவனா அஹுஜா மற்றும் நொய்டாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் மீரா பதக் ஆகியோர் எச்சரிக்கின்றனர்.
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் தொடைகளில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தோலில் வீக்கம் மற்றும் தடிப்புகள் ஏற்படுகின்றன. பருத்தி ஆடைகளைப் போல ஜீன்ஸ் வியர்வையை உறிஞ்சுவதில்லை என்பதால், தொடை இடுக்குகளில் சேரும் ஈரப்பதத்தால் பூஞ்சைத் தொற்று உருவாகிறது. ஆண்களுக்கு இதனால் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் என்றும், பெண்களுக்கு யோனி மற்றும் கருப்பை சார்ந்த தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தால் செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை மற்றும் அடிவயிற்று வலி போன்றவை உண்டாகின்றன. இடுப்பு மூட்டுகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிபவர்களுக்கு இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்பட்டுத் தசை பலவீனம் அடைகிறது.
இரவு நேரத்தில் ஜீன்ஸ் அணிந்து உறங்குவது உடலுக்குத் தேவையான காற்றோட்டத்தைத் தடுத்து, தீவிரமான தோல் அரிப்பு மற்றும் புண்களை உண்டாக்கும். எனவே, இரவு வேளைகளில் ஜீன்ஸைத் தவிர்த்து, தளர்வான பருத்தி (Cotton) ஆடைகளை அணிவது நல்ல உறக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தரும்.
ஃபேஷனுக்காக ஆரோக்கியத்தை இழக்காமல், உடலுக்குத் அசௌகரியம் தராத சரியான அளவிலான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதே சிறந்தது. குறிப்பாக நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதைத் தவிர்ப்பதே நம் உடலுக்கும் சருமத்திற்கும் நாம் செய்யும் நன்மையாகும்.
