பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேசத்திலும் வளர்ப்பு நாய் ஒன்று சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி காசி இந்து பல்கலைக்கழக வளாகத்தில் காலை நடைப்பயிற்சியின் போது நடந்த இந்தச் சம்பவத்தில், 11 வயது சிறுவனின் தலை மற்றும் முகத்தை நாய் கடித்துக் குதறியுள்ள துயரம் அரங்கேறியுள்ளது.
அதாவது பிரேமா ராம் சௌத்ரி என்பவர் அங்குள்ள மருத்துவமனையில் மூத்த நர்சிங் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் கடந்த வியாழக்கிழமையன்று காலையில் தனது இரு மகன்களுடன் அவர் வளாகத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், தனது இளைய மகனான அபினவ்வை (11) வீட்டிற்குச் செல்லும்படி அவர் கூறியுள்ளார். சிறுவன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்த போது, வீட்டின் அருகில் உள்ள பகுதியில் திடீரென நாய் ஒன்று அவைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் சென்றவர்கள் அதிர்ந்து போயினர்.
நாயின் கோரத் தாக்குதலில் சிறுவன் அபினவ்வின் தலை மற்றும் முகம் படு காயமடைந்தன. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை, அந்த வழியாக வந்த சஞ்சய் ராய் மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு ஸ்கூட்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். முகத்திலும் தலையிலும் ஆழமான காயங்கள் இருந்ததால், அவருக்கு சுமார் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்தப் பகுதியில் ஸ்ரத்தா சிங் என்பவருக்குச் சொந்தமான வளர்ப்பு நாய் எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் சுற்றித் திரிந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து, நாய் யாருடையது மற்றும் எந்தச் சூழ்நிலையில் இந்தத் தாக்குதல் நடந்தது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி வளாகங்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
