சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு முன்பாக முறையான பயிற்சி பெற்று, முறையான சோதனைகளைத் தாண்டி ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது மிக முக்கியமான பொறுப்பு வாய்ந்த ஒரு செயலாகும். சாலையில் நிகழும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்த முழுமையான டிரைவிங் டெஸ்ட் முறையையே உலகறியச் செய்து கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு சிறிய அடைக்கப்பட்ட அறை போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. எதிரே சில அதிகாரிகள் அமர்ந்திருக்க, ஒரு நபர் மட்டும் நாற்காலியில் அமர்ந்துள்ளார். ஆனால், அந்த அறையில் எந்தவொரு காரோ அல்லது வாகனமோ இல்லை. இருப்பினும், அதிகாரிகள் அந்த நபரிடம் காரை இயக்குவது போன்ற நடவடிக்கைகளைச் செய்யும்படி கூறுகின்றனர். எக்ஸைலேட்டர் கொடுப்பது, பிரேக் பிடிப்பது, கியர் மாற்றுவது போன்ற கட்டளைகளை அதிகாரிகள் பிறப்பிக்கின்றனர்.

இதற்கடுத்து நடக்கும் நாடகத்தை நம்புவது சற்று கடினம்தான். அந்த நபர் நாற்காலியில் அமர்ந்தபடியே, நிஜமாகவே கார் ஓட்டுவது போல தனது கை, கால்களை காற்றில் அசைக்கத் தொடங்குகிறார். நாற்காலியைக் காரின் ஸ்டீயரிங் போல நினைத்துத் திருப்புவது, கால்களால் பிரேக் மற்றும் எக்ஸைலேட்டரை அழுத்துவது போன்ற பாவனைகளைச் செய்கிறார். வெறும் சில விநாடிகள் மட்டுமே நீடிக்கும் இந்த வேடிக்கையான நாடகம் முடிந்தவுடன், அதிகாரிகளின் தீர்ப்பும் வெளியாகிவிடுகிறது. அந்த நபரைத் தேர்விலும் வெற்றிபெறச் செய்த அதிகாரிகள், “நீங்கள் பாஸ் ஆகிவிட்டீர்கள்” என்று வாழ்த்துகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by How World Works (@howorldworks)

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடந்ததாக வீடியோவில் கூறப்படும் நிலையில் இது ஒரு முறையான ஓட்டுநர் தேர்வு போலத் தெரியவில்லை, மாறாக ஏதோ ஒரு காமெடி படத்தைப் பார்ப்பது போல இருப்பதாகப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். காரே இல்லாமல், வெறும் காற்றில் கை-கால்களை ஆட்டுவதன் மூலம் ஒருவர் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் ஆகிவிட்டால், நிஜச் சாலைகளில் பாதுகாப்பான பயணம் எப்படி சாத்தியமாகும் என்று மக்கள் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற விசித்திரமான பழைய வீடியோக்களும் இதற்கு முன்னரும் இணையத்தில் வலம் வந்துள்ளன. சில வீடியோக்களில், ஓட்டுநர் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களது வாயாலேயே இன்ஜின் சத்தம் எழுப்பிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு கார் ஓட்டுவது போல நாடகமாடிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, இதுவரை 6 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது. ஓட்டுநர் உரிமம் என்பது வெறும் காகிதத் துண்டுதானா அல்லது சாலைகளில் இறங்குவதற்கு முன்பு ஒருவருடைய உண்மையான ஓட்டுநர் திறனைச் சோதிப்பது அவசியமில்லையா என்ற விவாதத்தை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை பலமாக எழுப்பியுள்ளது.