ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர், நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் ஏற முயன்ற அந்தப் பயணி கீழே விழுந்ததைக் கண்ட பாயிண்ட்ஸ்மேன் சௌரப் குமார் சிங், ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக ரயில் மேலாளருக்குச் சிவப்புச் சமிக்ஞை காட்டினார். எச்சரிக்கையை உணர்ந்த ரயில் மேலாளர் உடனடியாக அவசரப் பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை  அதிகாரி மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஒன்றிணைந்து, தண்டவாளத்தில் சிக்கிய பயணியைப் பத்திரமாக வெளியே இழுத்தனர். ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாட்டால் அந்தப் பயணி பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் மீட்பு வீடியோக்களை மத்திய ரயில்வே தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் பயணி ஆபத்தான முறையில் கீழே விழுவதும், ஊழியர்கள் அவரைச் சாதுரியமாக மீட்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

“>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகள் யாரும் உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது என்றும், பாதுகாப்பு விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.