வாழ்க்கையில் பிரிந்துபோன முன்னாள் காதலன் அல்லது காதலி பற்றி அடிக்கடி கனவு வருவது பலருக்கும் நடக்கும் ஒரு இயல்பான விஷயம்தான். திடீரென ஏற்படும் பிரேக் அப் மற்றும் காரணமே இல்லாமல் பிரியும் போது மனதிற்குள் எழும் பல கேள்விகள் பதில் கிடைக்காமல் ஆழ்மனதில் தங்கி, பின் கனவுகளாக வெளிப்படுகின்றன. மேலும், அவர்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள், இடங்கள் அல்லது பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது ஆழ்மனது அந்த நினைவுகளைத் தூண்டுகிறது.
தனிமை உணர்வு, மன அழுத்தம் அல்லது கவலை இருக்கும் போது, நமது மூளை பழைய நல்ல நினைவுகளைத் தேட ஆரம்பிக்கும். அப்போது எக்ஸ் கனவில் தோன்றக்கூடும். எக்ஸ் கனவில் வருகிறார் என்பதற்காக அவரை மீண்டும் விரும்புகிறோம் என்று அர்த்தமில்லை; மாறாக, அந்த உறவில் கிடைத்த மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் அன்பை நமது மனம் மீண்டும் எதிர்பார்க்கிறது என்றுதான் பொருள்.
இதேபோல், முந்தைய உறவில் செய்த தவறுகளை மீண்டும் செய்துவிடுவோமோ என்ற பயமும், பழைய உறவில் இருந்து மனதளவில் முழுமையாக மீண்டு வராததும் கூட இத்தகைய கனவுகள் வர முக்கியக் காரணங்களாகும். சில நேரங்களில், நாம் புதிய உறவில் இருக்கும் போது ஏற்படும் ஒப்பீடுகள் மற்றும் குழப்பங்களும் எக்ஸ் பற்றிய நினைவுகளைக் கனவாக மாற்றக்கூடும்.
கனவுகள் என்பவை நமது ஆழ்மனதில் பதிந்த பழைய நினைவுகளின் பிரதிபலிப்பு மட்டுமே தவிர, அவை எதிர்கால முடிவுகளைத் தீர்மானிப்பது இல்லை. எனவே எக்ஸ் கனவில் வருவதால் மீண்டும் அவருடன் சேர வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அது முற்றிலும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது.
இந்தக் கனவுகளில் இருந்து வெளிவர உங்களுடைய உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தொடங்குங்கள். தேவையில்லாத குற்ற உணர்வைத் தவிர்த்து, உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துங்கள். பழைய நினைவுகளைக் கடந்து, நேர்மறை எண்ணங்களுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதே இதற்கான சிறந்த தீர்வாகும்.
