பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான ஆகிப் ஜாவீத் குடும்பத்தில் விசேஷக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இவரது மகளும், பிரபல எழுத்தாளருமான உக்பா ஆகிப் என்பவருக்கும் வெளிநாட்டு இளைஞர் ஒருவருக்கும் இங்கிலாந்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று விமரிசையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.
இது குறித்த மகிழ்ச்சியான தகவலையும், திருமணப் புகைப்படங்களையும் உக்பாவின் தாயாரும், பிரபல ஆங்கிலக் கவிஞரும், எழுத்தாளருமான ஃபர்சானா ஆகிப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தத் திருமண விழாவில் மணமகள் உக்பா வெள்ளை நிற நவீன மற்றும் பாரம்பரியம் கலந்த அழகிய திருமண உடையில் ஜொலித்துள்ளார். அதேபோல் மணமகன் முறையான ஃபார்மல் சூட்டில் காட்சியளித்துள்ளார். இந்த ஜோடியின் கைகளில் இடம்பெற்றிருந்த டாட்டூக்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றன.
புதிதாகத் திருமணமான தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்நாளில் சகல வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஃபர்சானா ஆகிப் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருமணமான உக்பா ஆகிப், இங்கிலாந்தின் புகழ்பெற்ற சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மீடியா மற்றும் சர்வதேச பத்திரிகைத் துறை பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகள் திருமணச் செய்திகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, கிரிக்கெட் மற்றும் இலக்கிய உலகைச் சேர்ந்த பலரும் ஆகிப் ஜாவீத் மற்றும் ஃபர்சானா ஆகிப் தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
