உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இளைஞர் ஒருவர் வைத்திருந்த புதிய கைப்பேசி திடீரென அதிக வெப்பமடைந்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்கூர் பகுதியைச் சேர்ந்த மஜித் என்பவர், வேலைக்காக காசியாபாத் சென்றுவிட்டு தனது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கால்சட்டை பையில் கைப்பேசியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பயணத்தின் நடுவே கைப்பேசி வழக்கத்தைவிட அதிகமாக சூடாகியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சிறிது நேரத்தில் கைப்பேசியிலிருந்து புகை வெளியேறியதாக மஜித் தெரிவித்துள்ளார். என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், அந்த கைப்பேசி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மஜித் அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவருக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

இந்த சம்பவத்தில் மஜித்தின் இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென கைப்பேசி வெடித்தது எப்படி என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கைப்பேசி அதிகமாக சூடானது குறித்து முன்கூட்டியே கவனித்தும், அதை பையிலிருந்து எடுப்பதற்குள் வெடித்துவிட்டதாக மஜித் கூறியுள்ளார்.

மஜித் பயன்படுத்திய கைப்பேசியை சம்பவம் நடப்பதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாக கூறப்படுகிறது. புதிதாக வாங்கிய கைப்பேசி இவ்வாறு வெடித்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைப்பேசியின் நிலை, வெடிப்புக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.