உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் சிவபெருமானின் புனித மாதமான இந்த மாதத்தில் இதுவரை எங்குமே பார்த்திராத ஒரு வியக்கத்தக்க பக்திச் செயல் அரங்கேறியுள்ளது. சாதாரண காவடி யாத்திரைகளை நாம் பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு பக்தர் முட்கள் நிறைந்த இரும்பு ஆணிகளில் படுத்தபடியே காவடி யாத்திரை மேற்கொண்டுள்ள காட்சி அனைவரையும் மிரளச் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வரும் இந்த வைரல் வீடியோவில், விசித்திரமான ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற நடமாடும் தளங்கள் ஊர்வலமாகச் செல்கின்றன. அதில் ஒரு தளத்தில் கங்கை நீர் நிரம்பிய புனிதக் கலசம் வைக்கப்பட்டுள்ளது; மற்றொரு தளத்திலோ கூர்மையான இரும்பு ஆணிகள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

மஞ்சள் நிற டி-ஷீட் அணிந்த சிவபக்தர் ஒருவர், அந்தத் தடியில் உள்ள கூர்மையான ஆணிகளின் மீது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் படுத்துக்கொண்டு தனது யாத்திரையைத் தொடர்ந்து வருகிறார். அவருக்கு அருகில் இருக்கும் மற்றொரு உதவியாளர், அந்த நகரும் தளத்தை மெதுவாகத் தள்ளிக் கொண்டு செல்கிறார்.

இணையத்தில் பலரும் இந்த விநோத யாத்திரையை ‘ஹத்-காவடி’ மற்றும் ‘தண்டோதி காவடி’ என்று குறிப்பிட்டு வருகின்றனர். மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் அம்புப் படுக்கையில் செல்வது  போல, தற்கால காவடி பக்தர் ஒருவர் ஆணிகளின் மீது படுத்துச் செல்வதை நெட்டிசன்கள் பலரும் சிலிர்ப்போடு பகிர்ந்து வருகின்றனர். பல நாட்களாகத் தொடரும் இந்த கடுமையான ஆன்மீகச் சாதனை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் பக்தரின் இந்த அசைக்க முடியாத உறுதியையும், சிவபக்தியையும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் இது மிகவும் ஆபத்தானது என்றும், காயங்களை ஏற்படுத்தலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆபத்தான செயல்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.