மத்திய பிரதேசம் மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள குட் பகுதியில் அமைந்துள்ள பத்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், கல்வித்துறையை உலுக்கியுள்ளது. மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க அரசு வழங்கிய உயர் தொழில்நுட்ப வசதி, தற்போது கேளிக்கை மேடையாக மாறிப்போன விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
பள்ளியில் மாணவர்களின் டிஜிட்டல் கல்விக்காகப் பொருத்தப்பட்டிருந்த பெரிய ஸ்மார்ட் டிவி யில், படிப்புக்கு பதிலாக பிரபல போஜ்புரி பாடலான ‘கமரியா தொலே தொலே’ என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலுக்கு வகுப்பறையின் நடுவே மாணவர்கள் உற்சாகமாக நடனமாடும் காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்புணர்வு குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்தபோது வகுப்பறையில் எந்தவொரு ஆசிரியரும் அல்லது பொறுப்பு அதிகாரியும் அங்கிருக்கவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம். மாணவர்களைக் கண்காணிக்க வேண்டிய ஆசிரியர்களின் மௌனமும், அலட்சியமும் கல்விக்கூடங்களை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் முறையைக் கொண்டு சேர்க்கவும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நவீனக் கருவிகள் இதுபோன்று தவறாகப் பயன்படுத்தப்படுவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை உடனடியாக விழித்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்., இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? வகுப்பறையில் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் அந்த நேரத்தில் எங்கே சென்றனர்? ஸ்மார்ட் டிவியில் பாடலை இயக்க அனுமதித்தது யார்? போன்ற பல கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில்தான் உண்மையான பதில்கள் கிடைக்கும்.
