உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், ஒருபுறம் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது தங்கையின் திருமணச் செலவைச் சமாளிக்க வழியின்றி தவித்த ஒரு இளைஞர், வேறு வழியின்றி திருட்டு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய அந்த இளைஞர், வெறும் 30 நிமிடங்களுக்குள் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணத்தைத் திருடிவிட்டு, விட்டுச்சென்ற ஒரு செருப்பால் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
ஜாஜமௌ-வின் தார்பகியா பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் காவல்துறையினரையே அதிர வைத்தது. அப்பகுதியில் வசிக்கும் HCL நிறுவனத்தின் தரவுப் பொறியாளர் ஓமான் என்பவர், தனது தாயார் மற்றும் சகோதரருடன் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மதிய வேளையில் துணிமணிகள் வாங்குவதற்காக கான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்றுள்ளார். வீடு பூட்டியிருப்பதைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரரான ஜாஃபர், துணிச்சலாக வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்துள்ளான். சமையலறையில் இருந்த தோசைக்கல்லை பயன்படுத்தி பூட்டு மற்றும் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றவன், பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிக்கொண்டு தப்பியோடியுள்ளான்.
மாலை வீடு திரும்பிய குடும்பத்தினர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தடயவியல் குழுவினர் கைரேகைகளைப் பதிவு செய்தனர். அப்போது வீட்டின் மாடியில் ‘8-ஆம் எண்’ செருப்பு ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வீட்டின் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதால் அதுவே முக்கிய துப்பு ஆனது.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த சந்தேக நபர்களைக் கண்காணித்த காவல்துறை, ஜாஃபர் அங்கிருந்து மெல்ல நழுவுவதைக் கவனித்தது. உடனே அவனது வாடகை அறைக்குச் சென்று பிடித்து தீவிரமாக விசாரித்தபோது, அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். அவனது உதவியுடன் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் முழுமையாக மீட்கப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையின்போது குற்றவாளி ஜாஃபர் கதறிழுது தனது நிலையை விளக்கியுள்ளான். தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் முழுப் பொறுப்பும் தன் மீதே விழுந்ததாகவும், இன்னும் ஒன்றரை மாதத்தில் தனது தங்கைக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளதாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் கையில் பணம் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்தவன், பக்கத்து வீட்டுக்காரர்கள் லக்னோ செல்வதை நோட்டமிட்டு இந்தத் தவறைச் செய்துள்ளதாகக் கூறி அழுதுள்ளான்
