அமெரிக்காவுடனான மோதல் போக்கில் ஈரான் தனது நிலைப்பாட்டை மேலும் கடினமாக்கியுள்ளது. வரும் 2029ஆம் ஆண்டுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அதுவரை அமெரிக்காவுடனான போரைத் தொடர்ந்து நீட்டிக்கப் போவதாக ஈரான் புரட்சிகரக் காவல் படையின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய சூழ்நிலை குறித்த ஈரானின் வியூகங்களை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த எந்தவொரு நாடும் அல்லது எதிரியும் ஒருமுறைக்கு பலமுறை அஞ்சும் நிலையை உருவாக்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடைவதற்கான ஒரு வழியாகவே, இந்தப் போரை டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை நீட்டித்து அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார மற்றும் ராணுவ இழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஈரானுக்கு எதிராகக் கத்தித் தூக்குபவர்கள் எவரும் அதற்கான பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் மோதல்களின் மூலம், அமெரிக்க ராணுவம் தாங்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் பலவீனமாக இருப்பதை ஈரான் கண்டறிந்துள்ளதாக  கூறியுள்ளார். மேலும், ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், ஒருவேளை அத்தகைய நிலை ஏற்பட்டாலும் அன்றைய தினம் அமெரிக்காவுக்கு தாங்கள் மேலும் ஆபத்தானவர்களாக மாறுவோம் என்றும் அவர் கூறினார். உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு ஆயிரக்கணக்கான பொருளாதார நலன்களும் சொத்துகளும் பரவிக்கிடப்பதாகவும், தேவைப்பட்டால் அவற்றை எளிதில் அழிக்க முடியும் என்றும் அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் சந்தித்து வரும் பேரிழப்புகளாலும், உள்நாட்டில் குறைந்து வரும் அரசியல் செல்வாக்காலும், எப்படியாவது இந்த போரை விரைந்து முடிக்க டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாயின. அணுசக்தி ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனையில் மட்டும் ஒரு உடன்பாடு ஏற்பட்டால் போதும் என்று அமெரிக்கா சற்று இறங்கி வந்ததாகவும் அறிக்கைகள் கூறின. ஆனால், டிரம்ப் பதவியில் இருக்கும் காலம் முழுவதையும் போர்க்களமாக மாற்றப் போவதாக ஈரான் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது உலக அரங்கில் புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.