மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், 7 ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் வகையில் 16.96 கேரட் வைரம் கிடைத்துள்ளது. சர்கோஹா கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் அவர்கள் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மழைக்காலத்தில் சுரங்கப் பகுதியில் மண்ணை ஆய்வு செய்தபோது, மண்ணுக்கு நடுவே பளபளப்பாக இருந்த கல்லை அவர்கள் கண்டனர். பின்னர் அது உயர்தர பச்சை நிற வைரம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்துக்கான குத்தகை 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுரங்கத்தில் சில மண் குவியல்கள் மீதம் இருந்ததால், தொழிலாளர்கள் தொடர்ந்து வைரத்தைத் தேடி வந்தனர். மழையின்போது அந்தப் பகுதியை ஆய்வு செய்தபோதுதான் இந்த வைரம் கிடைத்துள்ளது. குத்தகைதாரர் அகிலேஷ் பால் உள்ளிட்ட 7 பேரும் இந்த வைரத்தை கண்டெடுத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 7 பேரில் சந்தோஷ், ஷர்மன், அருண் ஆகிய மூன்று பேரும் 30 முதல் 38 வயது வரை பொருளாதாரச் சிரமம் காரணமாக திருமணம் செய்யாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரம் மூலம் கிடைக்கும் பணத்தில் தங்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தங்களது பழைய வீடுகளை சீரமைத்து புதிய வீடுகள் கட்டவும், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவவும் பணத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட 16.96 கேரட் வைரம் அரசு வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஏலம் நடத்தப்பட்ட பின்னர், விதிமுறைப்படி ராயல்டி மற்றும் அரசு கட்டணங்கள் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை 7 தொழிலாளர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பொருளாதார சிரமத்தில் இருந்த இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த வைரம், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தையே மாற்றும் என அவர்கள் நம்புகின்றனர்.
