ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் பகுதியில் கணவருடன் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் கமலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சுமார் 90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக  அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு கமலாவின் கணவர் பிரகாஷ் ஓட், அவரது சகோதரர் மற்றும் பெற்றோர் ஆகியோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, கமலா தானாகவே தீ வைத்துக் கொண்டதாக பிரகாஷ் போலீஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவரது வாக்குமூலம் குறித்து போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கணவன்-மனைவி தூங்கிய படுக்கை மட்டுமே தீயில் எரிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்றபோது கமலாவின் இரு குழந்தைகளும், சுமார் 4 வயது மற்றும் ஒன்றரை வயது கொண்டவர்கள், தாத்தா-பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கமலாவின் தாய் வீட்டார் தரப்பில் அவரது சகோதரர் போமாராம் புகார் அளித்துள்ளார். சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷை கமலா திருமணம் செய்ததாகவும், திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை தொடர்பாக அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், அடிக்கடி தாக்கப்பட்டதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரகாஷ்தான் கமலாவுக்கு தீ வைத்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கமலாவின் தாய் வீட்டார் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, கணவர் பிரகாஷை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினரின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், உடற்கூராய்வு அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே சம்பவத்தின் முழு உண்மை தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.