இந்திய திரையுலகில், குறிப்பாக பாலிவுட்டில் வெளிப்புறத்தில் இருந்து வரும் இளம் நடிகைகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக ‘காஸ்டிங் கவுச்’ எனப்படும் பட வாய்ப்பிற்காக தவறான அழைப்புகளுக்கு இணங்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவின் முன்னாள் காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான எல்வி அவ்ராம், தான் திரையுலகிற்கு நுழைந்த ஆரம்ப கட்டத்தில் சந்தித்த மிக மோசமான மற்றும் அதிர்ச்சிகரமான காஸ்டிங் கவுச் அனுபவங்களை வெளிப்படையாகப் பேசி திரையுலகையே அதிர வைத்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில், முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலர் தனக்கு அளித்த அசிங்கமான ஆஃபர்கள் குறித்தும், அவர்கள் நடந்துகொண்ட விதம் குறித்தும் அவர் மனம்திறந்து பேசியுள்ளார்.
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பாக பல சந்திப்புகளில் கலந்துகொண்டபோது, நான்கு முன்னணி இயக்குநர்கள் தன்னை மிகவும் ஆபாசமான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், பட வாய்ப்பு வேன்டும் என்றால் தங்களோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று நேரடியாகவே கட்டாயப்படுத்தியதாகவும் எல்வி அவ்ராம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களுடன் கைகுலுக்கும் போது கூட கையை தேவையின்றி அழுத்திப் பிடித்து தவறான சிக்னல்களைக் கொடுத்ததாகவும், அதுபோன்ற தருணங்களில் தான் மிகுந்த பயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
பெண் என்ற ரீதியில் தனது சுயமரியாதையை இழந்து எந்தவொரு பட வாய்ப்பையும் பெற விரும்பவில்லை என்பதால், அத்தகைய கீழ்த்தரமான வாய்ப்புகளை உடனுக்குடன் மறுத்து வெளியேறியதாக அவர் கூறியுள்ளார். வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரையுலகில் தனது திறமையால் மட்டும் அடையாளத்தைப் பெற நினைத்த தனக்கு, இந்த அனுபவங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியையும் கசப்பான பாடத்தையும் கொடுத்ததாக எல்வி அவ்ராம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திரையுலகில் பெரிய பின்னணி இல்லாமல் சொந்த உழைப்பை மட்டுமே நம்பி வரும் இளம் பெண்களுக்கு இதுபோன்ற ஆபத்துகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதை அவர் இதன் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் தைரியமாக செயல்பட்ட எல்வி அவ்ராமின் இந்த வெளிப்படையான வாக்குமூலம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருப்பதோடு, அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவையும் பெற்றுத் தந்துள்ளது.
