இந்தியா – சீனா இடையே அரசியல் மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இரு நாடுகளின் உறவில் மனிதநேயத்தின் அடையாளமாக இன்றும் நினைவுகூரப்படும் ஒரு இந்தியர் உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பிறந்த டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ், சீன மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நினைவாக சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் சிலையும் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளன.

1938-ஆம் ஆண்டு ஜப்பான் – சீனா போரின்போது, சீனாவுக்கு உதவுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டது. அதில் 28 வயதே ஆன அறுவை சிகிச்சை நிபுணரான கோட்னிஸும் இடம்பெற்றிருந்தார். போரின் கடுமையான சூழலிலும் முன்களத்துக்குச் சென்று, குறைந்த மருத்துவ வசதிகளுக்கு மத்தியில் காயமடைந்த சீன வீரர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார்.

1940-ஆம் ஆண்டு நடைபெற்ற கடுமையான போரின்போது, தொடர்ந்து 72 மணி நேரம் ஓய்வின்றி நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக அவரது வரலாறு குறிப்பிடுகிறது. அந்த நேரத்தில் அவரது தந்தை இறந்த செய்தி வந்தபோதும், தனது பணியைத் தொடர்ந்தார். தொடர்ந்து ஏற்பட்ட உடல் சோர்வு, தூக்கமின்மை மற்றும் நச்சுத் தொற்று காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் 1942-ஆம் ஆண்டு, தனது 32-வது வயதில் சீன மண்ணிலேயே உயிரிழந்தார்.

கோட்னிஸின் மறைவு சீன மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டின் தலைவர் மாவோ சேதுங் அவருக்கு இரங்கல் தெரிவித்தார். இன்றும் சீனாவில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எல்லைகளையும் மொழியையும் கடந்து மனிதநேயத்துக்காக பணியாற்றிய ஒரு இந்திய மருத்துவரின் கதை, பல ஆண்டுகளுக்குப் பிறகும் சீனாவில் நினைவுகூரப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.