பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சோட்டி உபாத்யாய், ரிஷப் குமார் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே திருமணமான சோட்டி, ரிஷப்புடன் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதியில் உள்ள சில்வாசாவுக்குச் சென்று அவரை திருமணம் செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை ஏற்காத நிலையில், இருவரும் சில்வாசாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே, தன்னை கணவரின் குடும்பத்திடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சோட்டி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு சோட்டி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடலை வாடகை வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு ரிஷப் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸார் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த பின்னர் அவர் சில்வாசாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடுவதற்காக உரிமையாளர் சென்றபோது சந்தேகத்துக்கிடமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்து சோட்டியின் உடல் மீட்கப்பட்டு, அவர் அடையாளம் காணப்பட்டார். இதைத்தொடர்ந்து சில்வாசா போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ரிஷப்பைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, ரிஷப் உத்தரப் பிரதேசத்தின் வாராணசி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தரப் பிரதேச சிறப்புப் படை மற்றும்  போலீஸார் இணைந்து வாராணசி  தொழிற்பேட்டையில் அவரைக் கைது செய்தனர். அங்கு அவர் தனது அடையாளத்தை மறைத்து கூலி வேலை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரிஷப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.