தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வது அளப்பரிய நன்மைகளையும் பார்வதியின் பரிபூரண அருளையும் தரும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டின் பின்னணியில் சுவாரசியமான ஆன்மீக புராண வரலாறுகள் உள்ளன.
புராணங்களின்படி, பார்வதி தேவி சிவபெருமானை அடைவதற்காகத் தீவிர தவமிருந்த காலம் இந்த ஆடி மாதம் ஆகும்.

தேவியின் கடும்தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்குக் காட்சியளித்து அருள் புரிந்தார். அதேபோல, உலக உயிர்களைக் காக்கவும், தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் பார்வதி தேவி ‘சக்தி’யாக அவதரித்த மாதமாகவும் ஆடி மாதம் போற்றப்படுகிறது. மற்றொரு புராணக் கதையின்படி, ஆடி மாதத்தில் சூரியன் தனது பாதையை தெற்கு நோக்கி மாற்றி  பயணிக்கத் தொடங்குகிறார்.

இது தேவர்களின் இரவுக் காலத்தின் தொடக்கமாகும். இந்நாட்களில் பூமிக்குக் காப்பவளாகவும், நோய்களிலிருந்து மக்களைக் காக்கும் தாயாகவும் பராசக்தி விளங்குகிறாள். இதனால் தான் ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தல், வேப்பிலை சாற்றுதல், விளக்கு பூஜை செய்தல் போன்ற சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

ஆடி மாதத்தில் வீசும் காற்று மற்றும் பருவமழை மாற்றங்களால் பரவக்கூடிய நோய் நொடிகளைத் தடுக்கும் பொருட்டு, வேப்பிலை, எலுமிச்சை மற்றும் கூழ் படைத்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்யும் வழக்கம் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது.