பசிபிக் பெருங்கடலின் நடுவே, சுமார் 10,000 மக்கள் தொகையுடன் அமைந்துள்ள துவாலு என்ற சிறிய தீவு நாடு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. வத்திக்கான் நகரத்திற்கு அடுத்தபடியாக உலகில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடான இது, வெறும் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒன்பது சிறிய தீவுகளின் தொகுப்பாகும்.
துவாலு நாட்டின் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து வெறும் 4.6 மீட்டர் மட்டுமே உயரத்தில் உள்ளது. இங்கு கடல் மட்டம் ஆண்டுக்கு சராசரியாக 3.9 மில்லிமீட்டர் வரை உயர்ந்து வருகிறது. இது உலகளாவிய சராசரியை விட இருமடங்கு அதிகமாகும். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்நாட்டின் இரண்டு தீவுகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கும் அபாயத்தின் விளிம்பில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடல்நீர் ஊடுருவல் மற்றும் அடிக்கடி ஏற்படும் புயல்கள் காரணமாக நிலத்தடி நீர் பாழாகி, விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2015-ல் வீசிய ‘பாம்’ புயல் இந்நாட்டின் பெரும் பகுதிப் பயிர்களை அழித்து வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. மேலும், கடல் அலைகள் அடிக்கடி விமான நிலைய ஓடுபாதையையும், முக்கிய சாலைகளையும் வெள்ளத்தில் மூழ்கடித்து வருகின்றன.
இங்குள்ள ஃபனாஃபுட்டி தீவில் உள்ள ஒரே ஒரு விமான நிலைய ஓடுபாதைதான் மாலை வேளையில் சிறுவர்கள் கால்பந்து விளையாடும் மைதானமாகவும் பயன்படுகிறது. அந்த அளவுக்கு இங்கு நிலப்பரப்பு மிகவும் குறைவாக உள்ளது. மீன்பிடித்தல், வெளிநாட்டு உதவிகள் மற்றும் நாட்டின் இணையதள முகவரியான ‘.tv’ விற்பனை மூலமே இந்நாட்டின் பொருளாதாரம் இயங்கி வருகிறது.
View this post on Instagram
“>
அளவற்ற இயற்கையெழில் கொஞ்சும் இடமாக இருந்தாலும், புவியியல் சவால்கள் காரணமாக உலகிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாகவும் துவாலு உள்ளது. காலநிலை மாற்றத்தின் கொடூரமான தாக்கத்தால் ஒரு முழு நாடே உலகின் வரைபடத்திலிருந்து மறையப்போகும் பரிதாப நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
