தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல்வர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பல அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவது தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் தங்களது திறமையால் முத்திரை பதித்த பல முக்கியப் பிரமுகர்களைத் தேடி இப்போது அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்புகள் சென்று கொண்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அவர்கள் தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும், ‘கோட்’ (GOAT) படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கோயில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ‘லியோ’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராகவும், ‘பீஸ்ட்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தமிழக அரசின் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா உலகில் வெற்றிக் கூட்டணி அமைத்த இந்தத் தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தற்போது அரசின் முக்கிய அதிகார மையங்களில் அமர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது துறை சார்ந்த அனுபவங்களைக்கொண்டு இவர்கள் அரசு நிர்வாகத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ள நிலையில், இந்த அதிரடி நியமனங்கள் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளன.