தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களைக் கடந்துள்ள அவர், தினமும் காலையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது குறித்த ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தனது வசிப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டுள்ள தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தற்போது நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் முதல்வர் விஜய், தினமும் அங்கிருந்து சுமார் 17 கி.மீ தூரம் பயணம் செய்து தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். தினசரி இந்த நீண்ட தூரப் பயணம் காரணமாக நேர விரயம் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் புகார்கள் எழுந்துள்ளன.
பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், தலைமைச் செயலகத்திற்கு விரைவாக வந்து சேர்வதற்காகவும் பசுமை வழிச் சாலை அல்லது போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அரசு பங்களா ஒன்றிற்கு விரைவில் மாற அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் தங்களது வீடுகளைக் காலி செய்துவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கே அவர் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மறுபுறம், முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான ஒரு செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று பேசப்பட்டது.
ஆனால், தற்போது அந்தத் துயரமான சூழ்நிலை மாறி, சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கை அவர் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளதார். இவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதில் இவர்களது மகன் சஞ்சய் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன், “இரு தரப்பினருக்கும் இடையேயான பிரச்சினைகள் சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது; குடும்பத்தினர் மீண்டும் ஒன்றாக வாழத் முடிவு செய்துள்ளனர். முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு இந்தக் குடும்பத்தின் ஆதரவு மிகவும் அவசியமானது. அரசியல் ரீதியாக விமர்சிப்பதில் தவறில்லை என்றாலும், ஒருவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்துத் தொடர்ந்து பேசுவது முறையல்ல” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது குடும்பத்துடன் இணைந்து புதிய இல்லத்தில் குடியேறுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
