வார இறுதி நாட்களில் எந்தப் படத்தைப் பார்ப்பது என்று யோசித்துத் தவிப்போருக்குச் சரியான விருந்தாக அமையும் வகையில், அண்மையில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மலையாளத் த்ரில்லர் திரைப்படம் ‘உயிர்’. நடிகர் ரோஷன் மாத்யூ முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழில் பார்வையாளர்களுக்காகக் கிடைக்கிறது. படத்தின் தொடக்கத்தில் ஒரு பாழடைந்த கிணற்றில் கண்டெடுக்கப்படும் பெண்ணின் சடலமும், அதனை மையமாகக் கொண்டு தொடங்கும் காவல் துறை விசாரணையும் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து உட்கார வைக்கிறது.

கண்ணூர் தர்மடம் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணியில் சேரும் அஜீப் (ரோஷன் மாத்யூ) தலைமையிலான குழுவினர், கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட ஷோபா என்ற பெண்ணின் மரணம் குறித்து விசாரிக்கின்றனர். அப்பெண்ணின் கையில் பச்சைக் குத்தப்பட்டிருந்த பெயரைக் கொண்டு அவளது கணவன் ராஜுவைக் கைது செய்யும் போலீசாருக்குப் பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. ஷோபாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து, போலீசார் கைது செய்த நபர் ராஜு அல்ல என்றும், அவனது உண்மையான பெயர் புவனேஷ் என்றும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கும்போது கதை அதிரடித் திருப்பத்தைச் சந்திக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்கொலை என்று எளிதாக முடிக்கப்பட்ட வழக்கு ஒரு கொடூரமான கொலை வழக்காக உருவெடுக்கிறது. உண்மையான குற்றவாளியான புவனஷை அடுத்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்ற நெருக்கடியான சூழலில் நாயகன் களமிறங்குகிறான். ஷோபாவின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன, குற்றவாளி எப்படிப் பிடிக்கப்படுகிறான் போன்ற அதிரடி திருப்பங்களுடன் நகரும் திரைக்கதை, ஓடிடி பிரியர்களைப் படு ஈர்ப்புடன் கட்டிப்போட்டு வருகிறது.