சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே முக்கிய கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சர்வதேச அரசியல் சூழலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூன்று நாடுகளுக்கு இடையேயான ராணுவ மற்றும் பாதுகாப்பு ரீதியிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால், அது எஞ்சிய இரண்டு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். குறிப்பாக, பாகிஸ்தானை யாரேனும் தாக்கும் பட்சத்தில், அதற்குப் பதிலடி கொடுக்கச் சவூதி அரேபியாவும் துருக்கியும் உடனடியாகக் களம் இறங்கும் என்பது இந்த ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பின் கூட்டுப் பாதுகாப்பு விதிகளின் பாணியிலேயே இந்த முத்தரப்பு ஒப்பந்தமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, உறுப்பு நாடுகளுக்கு இடையே ராணுவ உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, கூட்டுப் பயிற்சி மேற்கொள்வது மற்றும் ஆபத்துக் காலங்களில் ஒருங்கிணைந்து ராணுவப் பதிலடி கொடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உலகளவில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்த மூன்று சக்திவாய்ந்த இஸ்லாமிய நாடுகளின் பாதுகாப்புப் கூட்டணி மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் உலகளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
