தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் மாநிலத்தின் முதல் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை வரிசையாகத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி உரிமைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பினார். கர்நாடக அரசு மிக வேகமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கூட்டத்தைக் கூட்டக் கோரி கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு தயங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், காவிரி என்பது நமது மக்களின் உயிர் நாடி என்றும், அதனை எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தும் எண்ணம் தவெக அரசுக்குச் சிறிதும் கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் பங்குகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மையமாகக் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 1969-ஆம் ஆண்டிலும் இதுதொடர்பாகப் பேரவையில் விவாதங்கள் நடத்தப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்த அவர், காவிரிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே நோக்கத்துக்காகவே தேவைப்பட்டால் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசவும் தான் தயங்கப் போவதில்லை என்றார். கர்நாடக செல்ல நான் தான் முதலில் கோரிக்கை வைத்தேன்.  பகையே பாராமல் எதிரெதிர் நாடுகளும் கூட பேசித் தீர்த்துக் கொள்ளும் போது, பக்கத்து மாநிலத்துடன் பேசித் தீர்ப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக மக்களின் உரிமைகளுக்காகத் தன் மீது அவமானம் பாய்ந்தாலும் அதையும் தாங்கத் தான் தயார் என்று அடித்துக் கூறினார்.