குஜராத் மாநிலம் காரி கிராமத்தில் நடந்த ஒரு வியக்கத்தக்க சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரையைத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த ஏழு சிங்கங்கள், அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பசுவை நைசாகச் சுற்றிவளைத்து திடீர் தாக்குதலுக்கு முயன்றன. இத்தனை பிரம்மாண்டமான சிங்கங்கள் தன்னைச் சூழ்ந்துள்ளதே என்று அஞ்சாமல், அந்தப் பசு தன் முழு பலத்தையும் தைரியத்தையும் திரட்டி அந்தச் சிங்கங்களை எதிர்த்துப் போராடியது. எந்தச் சூழலிலும் தன் உயிரைக் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத அந்தப் பசு, சிங்கங்களை நோக்கித் திரும்பத் திரும்பப் பாய்ந்து அவற்றை மிரள வைத்ததுடன், ஒரு சிங்கத்தின் முகத்திலேயே தன் காலால் பலமாக உதைத்து பின்வாங்கச் செய்தது.
இந்தத் திடீர் எதிர்ப்பைச் சற்றும் எதிர்பாராத அந்தச் சிங்கக் கூட்டம், சற்று தயங்கிப் பின்வாங்கி இறுதியில் அங்கிருந்து தப்பியோடியது. தன் கண்முன்னே நிகழ்ந்த இந்த அற்புதக் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்ததுடன், அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் இந்தத் துணிச்சலான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து பரவியது.
View this post on Instagram
ஒற்றைப் பசு ஒன்று ஏழு சிங்கங்களை எதிர்த்துப் போராடித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட விதம், இன்டர்நெட் முழுவதும் பலரையும் வியப்பிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தியுள்ளதுடன், அந்தப் பசுவின் வீரத்தை அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
பசு தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தச் சிங்கங்கள் கிராமத்திற்குள் தொடர்ந்து உலா வந்து ஒரு கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றதாக உள்ளூர் மக்கள் வேதனைத் தெரிவித்தனர். கிராமத்திற்குள் காட்டு மிருகங்களின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், தங்களது மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
