மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பிரபல மருத்துவரின் 19 வயது மகன் ஆன்லைன் கேமிங் செயலி மூலம் அரசு அதிகாரியின் 16 வயது மகளான 12-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிக் கடத்திச் சென்றுள்ளான். ஒரு வாடகை வீட்டில் அந்தச் சிறுமியை 24 மணி நேரத்திற்கும் மேலாகச் சிறைபிடித்த அவன், அங்கு அரங்கேற்றிய கொடூரமான சித்ரவதைகள் ஒட்டுமொத்த மனிதகுலத்தையுமே உலுக்கியுள்ளது. மாணவிக்கு போதை சாக்லேட் கொடுத்து மயக்கமடையச் செய்த அந்த மிருகம், சவுக்கடி, மெட்டல் பெல்ட் மற்றும் கத்திகள் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளதுடன், சிறுமியின் உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழமான காயங்களையும் கடித்த ரத்தக்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் அதிரடியாகக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, சிறுமியின் கழுத்தில் மருத்துவமனை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்த குற்றவாளியை போலீசார் மிகுந்த சாமர்த்தியத்துடன் கைது செய்தனர். சம்பவ இடத்திலிருந்து பிடிஎஸ்எம் (BDSM) கிட் எனப்படும் சித்ரவதை உபகரணங்கள், விலங்குப் பூட்டு, நைலான் கயிறுகள், மூன்று கத்திகள் மற்றும் மயக்க மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடுமையான உடல் ரீதியான பிரதாசனைகளாலும், அதிகப்படியான ரத்தப் போக்கு மற்றும் மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவி, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள அந்த வாலிபரின் திமிரடங்காத நடவடிக்கைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காவல் நிலையக் காவலில் உள்ளபோது அவன் காட்டும் ஆடம்பர நட்டுக்களும், கழிவறை மற்றும் சுவர்கள் சரியில்லை எனக் கூறி தனக்கு பீட்சா, பிரீமியம் உணவு மற்றும் மெத்தைகள் வேண்டும் எனக் கேட்பதும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நீதிமன்றக் காவலில் வைத்து அவனிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
