மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஷேரிங் இ-ரிக்ஷாவை மையமாகக் கொண்டு கைவரிசை காட்டி வந்த ஒரு பெரிய அளவிலான இன்டர்ஸ்டேட் திருட்டுக் கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவிலிருந்து தனது மகளின் புகுந்த வீட்டிற்கு வந்த முதியவர் ஒருவர் இந்தத் திருட்டுக் கும்பலின் பிடியில் சிக்கித் தவித்துள்ளார். ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தனியாகப் பயணம் செய்யும் முதியவர்கள் மற்றும் பெண்களைக் குறிவைத்து, ஒரே இ-ரிக்ஷாவில் ஏறி நைசாகப் பேச்சுக் கொடுத்து அவர்களின் பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைத் திருடுவதை இந்தச் கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சுமார் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து இந்தத் துப்பு துலக்கியுள்ளனர். விசாரணையில் இந்தத் திருட்டுக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய மெகபூப் ஹமீத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ள இவர் மீது மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, இந்தத் திருட்டு மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவை அவர் கட்டி வசித்து வந்துள்ளது காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. இவரிடமிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, இவருடன் சேர்த்து அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமான மேற்கொண்டு வருகின்றனர்.
