தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பற்றிக் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகக் கூறிப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் பெண்களையும் பிற தலைவர்களையும் இதுபோன்று ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல என்று கூறி, அவரது பழைய மற்றும் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுகளை நெட்டிசன்கள் பட்டியலிட்டுச் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், “டெட் பாடி போல ஊர்ந்து சென்று சசிகலாவின் கால்களுக்குள் சில்லறை தேடியவர் எடப்பாடி” என்று மிகவும் அநாகரீகமான முறையில் விமர்சித்துப் பேசியதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியலில் நாகரீகமான விமர்சனங்களைத் தாண்டி தனிப்பட்ட நபர்களை இதுபோன்று தரக்குறைவாகப் பேசுவது அவரது வழக்கமான பாணிதான் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், சமீபத்தில் சட்டமன்றப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, “செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனைத் தேடும் மனைவி” என்ற கதையைக் கூறி, மறைமுகமாக முதலமைச்சர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் பர்சனலாகப் பேசியிருந்ததும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் தலைவர், பொதுவெளியில் தனிநபர் விமர்சனங்களை இப்படி அருவருக்கத்தக்க வகையில் முன்வைப்பது அரசியல் நாகரீகத்திற்கு அழகல்ல என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி, “தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் விரைவில் பேரவையில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடுவார்கள்” என்று அவர் பேசிய பேச்சு சட்டமன்ற வரலாற்றிலேயே மிகவும் அநாகரீகமானது என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். பெண்களைக் கேவலப்படுத்தும் வகையிலும், அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தொடர்ந்து பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இப்படிப்பட்ட பேச்சுக்களை நியாயப்படுத்த முடிகிறதா என்றும் கேள்வி எழுப்பி, அந்த குறிப்பிட்ட வீடியோக்கள் மற்றும் பேச்சுகளை நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.
