ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான், தனது மகன் முதல் முறையாக நேரில் பார்த்த போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். தி ஹண்ட்ரெட் தொடரில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மி லண்டன் அணிக்காக விளையாடிய ரஷித் கான், சிறப்பான பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ரஷித் கான் 20 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது தி ஹண்ட்ரெட் தொடரில் அவரது சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக அமைந்தது. இந்த அபார ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டி ரஷித் கானுக்கு மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த தருணமாக அமைந்தது. அவரது மகன் அஸ்லான், முதல் முறையாக நேரில் வந்து ரஷித் கான் விளையாடுவதை பார்த்துள்ளார். இதனை தனது வாழ்நாளில் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு சிறப்பான நாள் என்று ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது மகன் முதல் முறையாக விளையாடுவதை பார்த்த நாளில் ஆட்டநாயகன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார். தனது மகன் தான் மிகப்பெரிய ஆதரவாளர், மிகப்பெரிய ஆசீர்வாதம் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் நபர் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
