இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தற்போதைய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி மற்றும் கல்வித் தகுதிகள் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின்படி, தற்போது பதவியில் உள்ள 31 முதலமைச்சர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.3,660 கோடியைத் தாண்டி வியக்க வைக்கிறது.
இந்த பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டிலேயே நம்பர் ஒன் பணக்கார முதல்வராக முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931.83 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், தமிழக முதல்வர் விஜய் ரூ.648.85 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மறுபுறம், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மிகக் குறைந்த அளவாக ரூ.55.24 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாகத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சொத்து மதிப்பைத் தாண்டி, முதலமைச்சர்களின் குற்றப்பின்னணிகள் குறித்த விவரங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆய்வு செய்யப்பட்ட 31 பேரில் 14 முதலமைச்சர்கள் (45%) மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகளும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பாலின பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமே நாட்டின் ஒரே பெண் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
கல்வி மற்றும் வயது சார்ந்த விவரங்களை நோக்கும்போது, பெரும்பாலான முதலமைச்சர்கள் (17 பேர்) 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி (75 வயது) மிக மூத்த முதல்வராகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா காண்டு மற்றும் மேகாலயாவின் கான்ராட் சங்மா (44 வயது) ஆகியோர் மிக இளைய முதல்வர்களாகவும் வலம் வருகின்றனர். மேலும், பெரும்பாலான முதல்வர்கள் முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகளாகவும் திகழ்கின்றனர்.
