தமிழகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்தனர்; ஆனால், தற்போது பெண்களை இழிவாகப் பேசுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், காவல்துறையின் செயல்பாடு குறித்தும் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய சி.வி.சண்முகம், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளாகப் பதவி வகித்த போதிலும், எப்போதுமே பெண்கள் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டினார்.
“சிங்கப் பெண் படை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தும் கூட, விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழலே நீடிக்கிறது. இதனால் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும், காவல்துறை இன்னும் முழுமையாக மாறவில்லை என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் மற்றும் பெண்களுக்குத் தொல்லை தருபவர்கள் எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் செயல்களைத் தலைமை ஊக்குவிப்பது சரியானதல்ல என்று குறிப்பிட்ட அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்தச் சூழலைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார் என்றார்.
குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
