உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டச் சிறையில், தங்களது கணவர்களையே கொன்றதாகக் கூறப்படும் வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ள 5 பெண் கைதிகள் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளனர். தாமினி, முஸ்கான், ரபிதா, அஞ்சலி மற்றும் கோமல் ஆகிய இந்த ஐவரும் தங்களது கணவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தேடி சொந்தக் குடும்பத்தினர் யாரும் வராததால், சட்டப்போராட்டத்துடன் சேர்த்து கடுமையான மன உளைச்சலையும் தனிமையையும் அவர்கள் சந்தித்து வருவதாகச் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் மிகவும் பரவலாகப் பேசப்படும் நீல டிரம் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான முஸ்கான், கடந்த சில மாதங்களாகச் சிறையில் உள்ள போதிலும், இதுவரை அவளது குடும்பத்தினர் யாரும் அவளைச் சந்திக்க வரவே இல்லை. இதேபோல், சமீபத்தில் கணவனைப் பாம்பைக் கடிக்கச் செய்து கொன்றதாகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு வந்த தாமினி, ஆரம்பத்தில் மன அழுத்தத்தால் சாப்பிடாமல் இருந்துள்ளார். பின்னர் சக கைதிகளின் ஆறுதலுக்குப் பிறகு உணவருந்திய அவர், தனது மகன் மாணிக்கை நினைத்து அடிக்கடி அழுது புலம்புவதுடன், அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்திலும் தவித்து வருகிறார்.
சிறை வளாகத்தில் நடைபெற்ற கைதிகள் கணக்கெடுப்பின் போது முஸ்கானும் தாமினியும் சந்தித்துக்கொண்டு சுமார் ஒன்றரை நிமிடங்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இதனிடையே, கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தனது காதலன் துஷாருடன் பேசவோ அல்லது சந்திக்கவோ தாமினி இதுவரை எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை என்று சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மன அழுத்தத்தைக் குறைக்கச் சிறை நூலகத்திலிருந்து சமய நூல்களை வாசித்து வரும் இவர்களை, சிறை நிர்வாகம் கவுன்சிலிங் மற்றும் உரிய பாதுகாப்புடன் கண்காணித்து வருகிறது.
தங்களது குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாது, சமூகத்தின் பார்வையிலிருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில் இந்த 5 பெண் கைதிகளும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், சொந்தபந்தங்களின் வருகை முற்றிலும் இன்றிச் சிறைக்குள்ளேயே முடங்கிப் போய்விட்ட இவர்களின் தற்போதைய நிலை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
