உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பிரதான பகுதியான மால் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘கேரேபதி கோவில்’, ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மிகவும் தனித்துவமான ஒன்றாகத் திகழ்கிறது. சாவன் மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதும் இக்கோவிலில், நாக பஞ்சமி திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து கொண்டுவரப்படும் அபூர்வ பாம்புகளைக் கொண்டு, இங்குள்ள விஷ்ணு பகவானுக்குச் செய்யப்படும் அலங்காரமும் வழிபாடும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. நாக பஞ்சமி நாளில், விஷ்ணு பகவானின் திருவுருவச் சிலையை ஒரு ஜோடி உயிருள்ள பாம்புகளால் அலங்கரித்து, பிரத்யேக கண்ணாடி அறைக்குள் வைப்பது இக்கோவிலின் பல தலைமுறை பாரம்பரியமாகும்.
இறைவனின் சிலையைச் சுற்றி பாம்புகள் தத்ரூபமாகப் பின்னிப் பிணைந்திருக்கும் இந்தக் காட்சியைக் காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு திரள்கிறார்கள். அத்துடன், வரங்களை அள்ளித்தரும் சிறப்பு வாய்ந்த பாம்புகள் பங்கேற்கும் கண்காட்சியும் இத்திருவிழாவின் போது நடத்தப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.
சுமார் 200 ஆண்டுகள் பழமையான இக்கோவில் உருவானதற்குப் பின்னால் சுவாரசியமான பின்னணிக் கதை ஒன்றும் கூறப்படுகிறது. கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் தாயாருக்குக் கனவில் தோன்றிய சேஷநாகர், இந்த இடத்தில் கோவில் கட்டுமாறு கட்டளையிட்டதாக நம்பப்படுகிறது.
அதன்பின்னர் கோவில் கட்டுவதற்காக அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, ஏராளமான பாம்புகளுடன் கூடிய ஒரு பழமையான கிணறு கண்டெடுக்கப்பட்டது. அன்றுமுதல் இந்த இடம் சேஷநாகத்தின் உண்மையான இருப்பிடமாகவே பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
நாக தெய்வத்தின் அருளையும், விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசியையும் பெற விரும்பும் மக்களுக்கு இத்தலம் ஒரு முக்கிய வழிபாட்டு மையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக, நாக தோஷங்கள் நீங்கவும், நினைத்த காரியங்கள் நிறைவேறவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
