பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திருமணமான பெண் ஒருவரைச் சந்திப்பதற்காக அவரது பழைய காதலன் நள்ளிரவில் ரகசியமாக வீட்டிற்கு வந்தபோது, கையும் களவுமாகப் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கிராமத்தில் கூடின பஞ்சாயத்தின் முடிவில் அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, பழைய காதலனுக்கே இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கஹாரியா மாவட்டத்தைச் சேர்ந்த அனுராதா குமாரி என்பவருக்கும், ஆசிரியர் பன்னா லால் யாதவ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பன்னாவிற்குப் பெற்றோர் வேறு இடத்துடனும் திருமணம் செய்து வைத்த போதிலும், இவர்களது தொடர்பு தொடர்ந்தது. இதற்கிடையில் நர்சிங் கல்லூரியில் சேர்ந்த அனுராதாவிடம் கல்லூரி ஊழியரான மனோகர் குமார் என்பவருக்கு காதல் மலர்ந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் வாழ்ந்து வந்த அனுராதாவைத் தேடிப்பிடித்த பழைய காதலன் பன்னா லால், கடந்த சில நாட்களாக அவருடன் மீண்டும் பழகத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த கணவனும் குடும்பத்தினரும் உஷாரான நிலையில், ஒரு நாள் நள்ளிரவில் அனுராதாவின் வீட்டிற்குப் பன்னா லால் ரகசியமாகச் சென்றபோது ஊர் மக்கள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர். மறுநாள் காலை கிராமத்தில் கூடிய பஞ்சாயத்தில், கணவனின் சம்மதத்துடன் பன்னாவை வைத்தே அனுராதாவின் தலையில் சிந்தூரம் வைத்து தாலியும் கட்டுவித்து இரண்டாவதாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த விசித்திரமான திருமணக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பன்னா லாலுக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில், பஞ்சாயத்து எடுத்த இந்த அதிரடித் தீர்ப்பு சட்டப்படி எங்கு போய் முடியும் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துப் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
