தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால், அது தொடர்பான அபராதம் செலுத்துவது குறித்துத் டிக்கெட் பரிசோதகருக்கும் ராணுவ வீரருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ரயில் மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், அந்த ராணுவ வீரரைக் கீழே இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகர், அவரை மிகக் கொடூரமாகக் காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அங்கிருந்த பயணிகள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காணொலி இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி, பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனங்களை எழுப்பியது. இதையடுத்து, உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகரைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது.
