மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்குப் பிற மாநிலங்களின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ பூஷன் சவுத்ரி பேசியிருப்பது, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில மக்களுக்கு இடையே தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்ரீ பூஷன் சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்குப் பிற மாநிலங்களின் சம்மதம் பெற வேண்டிய அவசியமில்லை என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். இவருடைய இந்த பொறுப்பற்ற பதில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளையும், அவர்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளையும் மனதில் கொண்டு மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இரண்டு மாநில மக்களிடையே தேவையற்ற மோதல் போக்கையும் பதற்றத்தையும் உருவாக்கும் வகையில் பேசக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிக் கண்டனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
