நீட்  தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியைக் கண்டித்து, மும்பையில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற ஆன்லைன் அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய பகுதிகளில் திரண்ட ஏராளமான மாணவர்களைப் போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றியுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்களை, காவல்துறை வாகனத்தில் இருந்தபடியே காவலர் ஒருவர், “இனிமேல் உங்களை இந்த போராட்டத்தில் பார்த்தால் உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடுவேன்” என்று கொடூரமாக மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பை காங்கிரஸ் கட்சியால் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், “உங்கள் பைகளில் தலா 50 கிராம் போதைப்பொருள் (கஞ்சா பொடி) வைத்து உங்களை பொய் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன்; அத்தோடு உங்கள் வாழ்க்கை முடிந்தது” என்று அந்த காவலர் மாணவர்களை மிரட்டுவது அப்பட்டமாகப் பதிவாகியுள்ளது. மேலும், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் தனது வேலைக்குச் சிரமம் ஏற்படுவதாகவும் அவர் ஆத்திரத்துடன் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் பவன் சாங்லே என்ற காவலர் என்பதை அடையாளம் கண்டுள்ள மும்பை காவல்துறை, அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, அவரை தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்துள்ளது.

போராட்டங்களை ஒடுக்க மும்பை காவல்துறை கையாண்டு வரும் இத்தகைய கடுமையான அணுகுமுறைகள் தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ஏற்கனவே போராட்டங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கிய அல்லது நோட்டீஸ் அனுப்பப்பட்ட மாணவர்களைப் போலீசார் குறிவைத்து டிஜிட்டல் முறையில் கண்காணித்து வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வராமல் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டும் என்று உள்ளூர் காவல் நிலையங்களில் இருந்து நேரடியாகத் தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்த வண்ணம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, அவர்கள் தங்களின் ‘லைவ் லொகேஷன்’ விபரங்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து போலீசாருக்கு அனுப்ப வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகச் சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் வாட்ஸ்அப் மூலமாகவே மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அச்சுறுத்தி வருவதாகவும் போராட்டக் குழுவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.