மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில், வாஷிங்டன் ஃபிரீடம் மற்றும் எம்.ஐ. நியூயார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், மூத்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கைரன் பொல்லார்ட் ஆகியோருக்கு இடையே நடந்த மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் ஃபிரீடம் அணி பேட்டிங் செய்த போது, 14-வது ஓவரை வீச கைரன் பொல்லார்ட் வந்தார். அந்த ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட, பொல்லார்ட் மிகுந்த கோபமடைந்தார். ஓவரின் கடைசிப் பந்தை ஸ்மித் தற்காத்து விளையாடியபோது, பந்தை உடனடியாகக் கைப்பற்றிய பொல்லார்ட், ஆவேசத்துடன் ஸ்மித்தை நோக்கி அதை வேகமாக எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்மித், ஓவர் முடிந்ததும் பொல்லார்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

களத்தில் இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், நடுவர்கள் உடனடியாகத் தலையிட்டுச் சூழலை அமைதிப்படுத்தினர். இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய எம்.ஐ. நியூயார்க் அணி 266 ரன்களைக் குவித்தது. வெற்றிக்கு 267 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் ஃபிரீடம் அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான 110 ரன்கள் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸின் 132 ரன்களின் உதவியுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

“>

இந்த வெற்றியை விட, போட்டியின்‌ போது நடந்த பொல்லார்ட்-ஸ்மித் மோதல் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.