உலகமே அதிநவீன தொழில்நுட்பங்களை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த 2026-லும், கராச்சியின் பரபரப்பான கடற்கரையிலிருந்து வெறும் 15 நிமிட படகுப் பயண தூரத்தில் காலம் அப்படியே உறைந்துபோய்க் கிடக்கிறது. அரபிக்கடலின் நடுவே அமைந்திருக்கும் ‘பாபா தீவு’ நவீன நாகரிக உலகின் எந்தவொரு சுவடும் இன்றி தன் 400 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை அப்படியே பாதுகாத்து வருகிறது.
சுமார் 12,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த தீவில், நீங்கள் ஒரு காரையோ, பைக்கையோ அல்லது ஒரு சாதாரண மிதிவண்டியைக்கூட பார்க்க முடியாது. முழுக்க முழுக்கப் பாதசாரிகளுக்கான குறுகிய தெருக்களைக் கொண்ட இந்தத் தீவின் ஒரே போக்குவரத்துச் சாதனம், வண்ணமயமான பாரம்பரிய மரப்படகுகள் மட்டும்தான். ‘மோரியோ பாட்டா’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இங்குள்ள மீனவ மக்கள், தலைமுறை தலைமுறையாகக் கைகளால் நெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு அரபிக்கடலில் மீன்பிடித்தே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
1843-ஆம் ஆண்டில் சிந்துப் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபோது, தங்களின் கடற்படைக் கப்பல்களுக்கு நிலக்கரி நிரப்புவதற்காக இங்கு அமைத்த பிரம்மாண்ட நிலக்கரிகிடங்குகள், இன்றும் சிதைந்து போன வரலாற்றின் சாட்சியாக அப்படியே காட்சியளிக்கின்றன. இங்குச் சுமார் 44,000 பேர் என்ற வீதத்தில் மக்கள் தொகை மிக அடர்த்தியாக இருந்தாலும், இங்குப் போலீஸ் ஸ்டேஷனோ அல்லது நீதிமன்றங்களோ கிடையாது.
ஏனெனில் இங்குப் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். மக்கள் மத்தியில் ஏதேனும் சிறு கருத்து வேறுபாடுகள் எழுந்தால் கூட, கிராமத்துப் பெரியவர்கள் ஒன்று கூடிப் பேசி மட்டுமே சுமூகமாகத் தீர்த்துக் கொள்கின்றனர். இந்த அமைதியான வாழ்க்கைக்குப் பின்னால், இந்தத் தீவு மக்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களும் ஏராளம்.
முறையான குடிநீர் விநியோகக் கட்டமைப்பு இல்லாததால், கராச்சியின் பிரதான நிலப்பரப்பிலிருந்து படகுகள் மூலம் அதிக விலை கொடுத்துக் குடிநீரை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலையும், அவசரச் சிகிச்சைக்கான மருத்துவமனை வசதி இல்லாததும் இந்தத் தீவு மக்களின் வாழ்வை இன்றும் ஒரு பெரும் போராட்டக் களமாகவே வைத்திருக்கிறது.
