மழைக்காலம் தொடங்கிவிட்டாலே இயற்கையின் எழிலைக் கொஞ்சும் மலைப்பாதைகளுக்குப் பயணம் செய்வதை இளைஞர்கள் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், கண்கவர் நீர்வீழ்ச்சிகளுக்கும் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளுக்கும் பெயர் பெற்ற மல்ஷேஜ் காட் மலைப்பாதைக்குத் தற்போதைய பருவமழையை ரசிக்கப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

ஆனால், இதே மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக அரங்கேறிய இயற்கையின் விபரீத காட்சி ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பார்ப்பவர்களைத் திக் திக் நிமிடங்களுக்கு ஆளாக்கியுள்ளது. மலைப்பாதையின் சுரங்கப்பாதைக்கு அருகே உள்ள ஒரு ஆபத்தான வளைவில், திடீரெனக் கண் இமைக்கும் நேரத்தில் அதீத வேகத்தில் புயல் காற்று வீசத் தொடங்கியது. இந்தச் சூறாவளிக் காற்றின் வேகத்தைக் கணிக்க முடியாமல், அந்தப் பாதையைக் கடக்க முயன்ற பல இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி நடுரோட்டிலேயே தங்களது வாகனங்களோடு அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.

காற்றின் சீற்றம் எந்த அளவுக்குக் கொடூரமாக இருந்தது என்றால், பைக்கர்களால் தங்களது வண்டிகளை நிமிர்த்தக் கூட முடியவில்லை; பாதசாரிகள் பலரும் காற்றில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கத் தரையோடு தரையாகச் சாய்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்த இக்கட்டான சூழலில், அங்கு நின்றுகொண்டிருந்த உள்ளூர் மக்களும் மற்ற சுற்றுலாப் பயணிகளும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்து, சாலையில் விழுந்து கிடந்த பைக்கர்களையும் அவர்களது வாகனங்களையும் பத்திரமாக மீட்டனர்.

“>

 

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவிலான காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றாலும், வளைவில் வாகனங்கள் கொத்துக்கொத்தாகச் சரிந்து விழும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பருவமழை காலங்களில் இது போன்ற மலைப்பாதைகளுக்குப் பயணம் செய்யும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.