காசியாபாத் பகுதியில் உள்ள காவலர் சாவடிக்கு வெளியே, உதவி கேட்டு 40 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம், காவல் துறையின் அலட்சியம் குறித்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த 22 வயதான ராஜ் குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட 20 ரூபாய் கட்டணத் தகராறு காரணமாகக் காவல் சாவடிக்குச் சென்றிருக்கிறார்.
மது போதையில் இருந்த இருவரும் சாவடியின் கதவை வலுவாகத் தட்டியபோது, கண்ணாடி உடைந்து ராஜ் குமாரின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் இருந்த பெண் காவலர்கள், அச்சத்தில் உள்ளே பூட்டிக்கொண்டதாகவும், ரத்த இழப்பால் துடித்த இளைஞருக்கு நீண்ட நேரம் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் காலதாமதமானதாகவும், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு மாத கர்ப்பிணி மனைவி, கோமாவில் இருக்கும் தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரன் எனத் தன் குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையையும் சுமந்து வந்த அந்த இளைஞனின் மரணம், குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்து 72 மணி நேரம் கடந்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளதுடன், உரிய நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
