பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொடூரமான முறையில் வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உட்பட கிட்டத்தட்ட 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரௌடி நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயிலில் வைத்தே மரணம் அடைந்தார். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில் இதனை எதிர்த்து அப்போது திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அப்போதைய தமிழக அரசின் மனுவை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான அஞ்சலை மற்றும் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமினும் வழங்கி இருந்தது. இதனை எதிர்த்து காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாறிய நிலையில் திமுக அரசு தாக்கல் செய்த மனுவை தமிழக வெற்றிக்கழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதாவது தற்போதைய அரசின் நிலைப்பாடு என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த மனுவை தமிழக வெற்றிக்கழக அரசு வாபஸ் பெற்றதால் இனி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
