கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிர் காலம். பஜனை பாடும் ஒரு தெய்வீகக் கூட்டத்தில் தான் சூரஜும் ஜோதியும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். பக்திப் பாடல்களின் பின்னணியில் ஜோதியின் முகம் சூரஜுக்கு தேவதையாகத் தெரிந்தது. வார்த்தைகள் வளர்ந்து, காதலாகக் கனிந்து, உலகமே காதலைக் கொண்டாடும் பிப்ரவரி 14, 2024 அன்று இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்தத் தேவதையின் முகமூடி கழல ஒன்றரை மாதங்களே தேவைப்பட்டன. திருமணமான ஒன்றரை மாதத்தில் ஜோதி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிந்ததும் சூரஜ் அதிர்ச்சியில் உறைந்தார். “என் வயிற்றில் வளரும் கருவுக்கு நீ காரணமல்ல” என்ற உண்மையை உணர்ந்த தருணம், அந்த வீட்டில் சண்டைப் புயல் வீசத் தொடங்கியது.

ஜனவரி 1, 2025. உலகம் புத்தாண்டுப் பிறப்பை வண்ண விளக்குகளோடு கொண்டாடிக்கொண்டிருந்த அந்த நள்ளிரவில், சூரஜின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. பக்கத்தில் தன் பச்சிளம் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூடப் பார்க்காமல், அடுப்பில் உப்பு, மிளகாய் தூள் கலந்து கொதிக்க வைத்த நீரை, தூங்கிக் கொண்டிருந்த சூரஜின் முகத்திலும் நெஞ்சிலும் ஊற்றிவிட்டு, ஜோதி அலறல்களோடு இருளில் மறைந்தாள்.

சூரஜின் முகம், கழுத்து, மார்புப் பகுதிகள் வெந்து கருகின. அந்த ரணத்திலும், தன் பக்கத்தில் தூங்கிய பிஞ்சுப் குழந்தையின் மேல் ஒரு சொட்டு வெந்நீர் கூடப் பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மருத்துவமனையில் மரணப் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்த சூரஜ், ஜோதி விட்டுச் சென்ற மொபைல் போன் மற்றும் கூகுள் டிரைவ் கணக்கை ஆராய்ந்தபோதுதான், தன் தலைக்கு மேல் தொங்கியிருந்த ஆபத்தின் வீரியம் புரிந்தது.

அவர் கண்டவை வெறும் கோப்புகள் அல்ல; ஜோதியின் ‘கல்யாண வேட்டை’ சரித்திரம். 2016-ல் முதல் திருமணம் தொடங்கி, ஒவ்வொரு கணவனிடமிருந்தும் பணம் பறிப்பது ஜோதியின் வாடிக்கையாக இருந்துள்ளது. யாராவது விலக நினைத்தால், ‘பலாத்கார வழக்கு’ போடுவேன் என்று மிரட்டித் திருமணம் செய்வது, பின்னர் ‘குடும்ப வன்முறை’ வழக்கு பதிந்து மிரட்டிப் பணம் பறிப்பதுதான் அவளது பாணி. அவள் கடந்து வந்த 5 ஆண்களுக்குப் பிறகு, சிக்கிய ஆறாவது பலிதான் இந்த சூரஜ். சூரஜிடம் ஒரு வீடியோ ஆதாரமும் சிக்கியுள்ளது. அதில், இந்த அத்தனை நாடகங்களுக்கும் தன் தாய்தான் காரணம் என்று ஜோதியே ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் பதிவாகியுள்ளது.

தற்போது ஜோதிக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. போலீசாரும் அவளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், சூரஜின் கவனம் இப்போது பழிவாங்குவதில் இல்லை; தன் கைகளில் தவழும் 7 மாதப் பெண் குழந்தையின் எதிர்காலத்தில்தான் இருக்கிறது. நெஞ்சில் தீக்காய வடுக்களோடு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு சூரஜ் கண்கள் கலங்கக் கூறுகிறார்:

என் மனைவி எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்தத் தாய் இல்லாதப் பிள்ளை என் உயிர். இதுவரை நான்தான் இதைப் பார்த்துக்கொண்டேன், என் வாழ்நாளின் இறுதிவரை என் அன்பை மட்டுமே கொடுத்து என் மகளை வளர்ப்பேன். அவருக்குத் துணையாக அவரது தாயும் சகோதரரும் நிற்கிறார்கள். துரோகம் இழைத்த ஒரு பெண்ணின் முகத்திரை கிழிக்கப்பட்டிருந்தாலும், ஒரு தகப்பனின் தர்மயுத்தம் இன்னும் டெல்லி தெருக்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.