மும்பையின் முல்லுண்ட் இரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலையில் நிகழ்ந்த ஒரு தொழில்நுட்பக் கோளாறு பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தித்வாலாவில் இருந்து சி.எஸ்.எம்.டி நோக்கிச் சென்ற ஏசி லோக்கல் இரயில் காலை 9:26 மணியளவில் முல்லுண்ட் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நின்றுகொண்டிருந்தபோது, அதன் குளிரூட்டும் வசதி திடீரென முற்றிலும் செயலிழந்தது. சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக ஏசி இயங்காததால், நெரிசல் மிகுந்த பெட்டிகளுக்குள் வெப்பமும் ஈரப்பதமும் மிக வேகமாக அதிகரித்தன.

இதனால் சாதாரண ரயில்களைப் போலன்றி, ஏசி லோக்கல் இரயில்களில் கதவுகள் தானியங்கி முறையில் பூட்டப்பட்டிருப்பதால் அவற்றை பயணிகளால் கைமுறையாகத் திறக்க முடியவில்லை. இதனால் போதிய காற்றோட்டமின்றி மூச்சுவிட முடியாமல் திணறிய பயணிகள், கதவுகளைத் திறக்கக் கோரி கூச்சலிட்டனர்.

இந்த கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மூன்று பயணிகள் கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர். அதில் பஹீம் அன்சாரி என்ற 43 வயது பயணி ஒருவர் மயக்கமடைந்து மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டதால், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார்.

மேலும் சில பெண் பயணிகள் மயக்க நிலைக்குச் சென்ற நிலையில், சக பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் அவர்களுக்கு முதலுதவி அளித்து மீட்டனர். இதனைத் தொடர்ந்து, கூடுதல் காற்றோட்டத்திற்காக முல்லுண்ட் முதல் குர்லா நிலையம் வரை கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் ரயில் இயக்கப்பட்டது.

பின்னர் இந்த ரயில் குர்லா பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மும்பையின் ஏசி லோக்கல் ரயில்களில் அடிக்கடி ஏற்படும் இத்தகைய குளிரூட்டும் கோளாறுகள் மற்றும் அவசர மருத்துவ வசதி இல்லாமை ஆகியவை பயணிகளிடையே தற்பொழுது கடுமையான அதிருப்தியையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.