மும்பையில் 11 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த கொடூரமான கொலைக் குற்றம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஐரோலி பகுதியைச் சேர்ந்த பலிராம் சூர்யநாத் குஷ்வாஹா என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார்.

இதுகுறித்து அவரது மனைவி சுனிதா, கணவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை என்று கூறி வந்துள்ளார். ஆனால், உண்மையில் சுனிதாவிற்கும் ராகுல் தஷ்ரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனை பலிராம் கண்டித்ததால், ஆத்திரமடைந்த சுனிதாவும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து, கடந்த 2025 ஆகஸ்ட் 9 அன்று குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில், தூங்கிக் கொண்டிருந்த பலிராமை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைப்பதற்காக அவரது உடலை மூன்று துண்டுகளாக வெட்டி, மூட்டைகளில் கட்டி, ராகுலின் ஆட்டோ மூலமாக கவ்லி தேவ் மலைக் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.

அதோடு அதன் பிறகு வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு சுனிதா தனது குழந்தைகளுடன் வேறொரு இடத்திற்கு குடியேறியுள்ளார். பல மாதங்களாக தம்பி காணாததால் சந்தேகமடைந்த பலிராமின் சகோதரர், சுனிதாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் இறங்கி, குற்றவாளிகளின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது சுனிதா மற்றும் ராகுலின் ரகசியம் அம்பலமானது. தற்போது இருவரையும் கைது செய்த போலீசார், காட்டில் இருந்து பலிராமின் உடல் பாகங்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.